
சமைக்க தேவையானவை
- சாதம் – 3/4 கப்
- கடலை மாவு – 1/2 கப்
- சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- காலிஃப்ளவர் – 1/4 கப்
- உருளைக்கிழங்கு – 1 (பொடியாக நறுக்கியது)
- பூண்டு – 3 பல்
- பச்சை மிளகாய் – 4-5 (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி – 1/2 இன்ச்
- சோம்பு – 1/2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/8 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிது
- கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
- உப்பு – சுவைக்கேற்ப
- எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் இஞ்சி, பூண்டு மற்றும் சோம்பை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடேற்ற வேண்டும்.
எண்ணெய் சூடாவதற்குள், ஒரு பௌலில் சாதத்தைப் போட்டு கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின் அதில் கடலை மாவு, சோள மாவு மற்றும் ஒரு டீஸ்பூன் சூடான எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது மற்றும் மற்ற பொருட்களையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பையும் சேர்த்து, நீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு பிசைந்து வைத்துள்ள கலவையை சிறிது எடுத்து, அடுப்பில் சூடாகி கொண்டிருக்கும் எண்ணெயில் உதிர்த்து விட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்தையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான அரிசி பக்கோடா தயார்.
குறிப்பு:
இந்த பக்கோடாவிற்கு முட்டைக்கோஸ், குடைமிளகாய், கேரட் போன்ற காய்கறிகளையும் பயன்படுத்தலாம். இந்த பக்கோடாவை தயாரித்த உடனேயே சாப்பிட்டால் தான் மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும். உங்களுக்கு வேண்டுமானால் இத்துடன் ஒரு சிட்டிகை சமையல் சோடாவையும் சேர்த்துக் கொள்ளலாம்.