
செய்முறை
பெரும்பாலும் ராகி ஆப்பத்தைப் பற்றி நாம் யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். ஆனால் மிக மிக சுலபமான முறையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ராகி ஆப்பம் எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இந்த ராகி ஆப்பம் அரிசி மாவில் சுட்ட ஆப்பம் போலவே நடுவில் சாஃப்டாக ஓரத்தில் மொறுமொறுவென கிடைக்கும். சாப்பிடுவதற்கு அத்தனை அருமையாக இருக்கும். குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபி இது. நேரத்தைக் கடத்தாமல் ரெசிபிக்கள் செல்வோம்.
முதலில் ஒரு அகலமான பவுல் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கேழ்வரகு மாவு – 2 கப், அதே கப்பில் 2 கப் அளவு தண்ணீரை ஊற்றி மாவை கட்டிகள் இல்லாமல் நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள்.
கரைத்த இந்த கேழ்வரகு மாவுடன் துருவிய தேங்காய் – 3/4 கப், வடித்த சாதம் – 3/4 கப், உப்பு – 1 ஸ்பூன், சர்க்கரை – 2 ஸ்பூன் இந்த பொருட்களை போட்டு நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த கப்பில் ராகி மாவை அளக்கிறீர்களோ அந்த கப்பிற்கு ஏற்றது போல உப்பும் சர்க்கரையும் பார்த்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்போது இந்த கலவையை அப்படியே மிக்ஸி ஜாரில் ஊற்றி நைசாக விழுதுபோல் அரைத்து விடுங்கள். மாவில் போட்டிருக்கும் தேங்காய் துருவல், சாதம் அனைத்துமே மைய அரைந்து விடும். மிக்ஸி ஜாரில் இருந்து இந்த மாவை ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றி விடுங்கள். ஒரு மூடி போட்டு அப்படியே வைத்துவிடவேண்டும். 8 மணி நேரம் இந்த மாவு புளித்து வரட்டும்.
மாவு நன்றாக புளிக்கும்போது இட்லி மாவு, ஆப்பம் மாவு போல பொங்கி வந்திருக்கும். இந்த மாவை நன்றாக கலந்து கொள்ளுங்கள். ஆப்பம் வார்ப்பதற்கு தேவையான மாவு தயார். தேவைப்பட்டால் ஆப்பம் வார்க்கும் போது 1/4 ஸ்பூன் அளவு ஆப்ப சோடா மாவை இதில் போட்டு கலந்து கொள்ளலாம்.
அடுப்பில் ஆப்பச் சட்டியை வைத்து விட்டு, இந்த ராகி ஆப்ப மாவை ஊற்றி எப்போதும்போல ஆப்பம் வார்த்து சுழற்றி, ஒரு மூடி போட்டு மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் சூப்பரான ஆப்பம் தயார்.
இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் பால், குருமா, சட்னி எதை வேண்டுமென்றாலும் பரிமாறிக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். உங்களுக்கு ஆரோக்கியமான இந்த ரெசிபி பிடிச்சிருந்தா ஒரே ஒருமுறை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.