
சமைக்க தேவையானவை
- பாஸ்மதி அரிசி – 3 கப் (½ கிலோ)
- சிக்கன் அல்லது மட்டன் – ½ கிலோ
- இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
- எண்ணெய் + நெய் – தேவைக்கு
- அரைத்தது உப்பு – தேவைக்கு
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- தயிர் – ½ கப்
- பட்டை ,ஏலம், – சிறிதளவு
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- ரம்ப இலை – 4 to 5 (விரல் அளவு)
- கொத்தமல்லி – ½ கட்டு
- புதினா – ½ கட்டு
- பச்சை மிளகாய் – 4 கீறியது
- தக்காளி – 200 கிராம்
- வெங்காயம் – 200 கிராம்
செய்முறை
முதலில் வெங்காயம், தக்காளி, மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். மல்லி புதினா ரம்ப இலைகளை சுத்தபடுத்தி வைக்கவும். பாதாம் பருப்பை ஊறவைத்து தோல் நீக்கி அரைத்து வைக்கவும். கறியை சுத்தம் செய்து அதில் கொஞ்சம் இஞ்சி பூண்டு அரவை, தயிர் , உப்பு சேர்த்து சிலநிமிடங்கள் ஊறவிடவும்.
ஒரு கனமான குக்கர் பாத்திரத்தில் எண்ணெய் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலம், ரம்ப இலை, பச்சைமிளகாய் வெங்காயம் போட்டு சில நிமிடம் வதங்கி நிறம் மாறியதும் மீதி இருக்கும் இஞ்சி பூண்டு அரவை, தயிர் சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும்.
பின்னர் தக்காளி, முக்கால் பாகம் மல்லி புதினா இலைகள், சிறிது உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள் சேர்த்து தக்காளி குழைய எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதங்க விடவும். இப்போது கறி கலவையை சேர்த்து பிரட்டி மிதமான தீயில் வேகவிடவும். மட்டனாக இருந்தால் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று அல்லது நான்கு விசில் விட்டு வேகவிட்டு இறக்கவும்.
சிக்கனுக்கும் அதே ஒரு கப் தண்ணீர் விட்டு விசில் போடாமல் வேக விடவும். அரிசியை கழுவி பதினைந்து நிமிடம் ஊறவைக்கவும். பிறகு ஒரு கப் அரிசிக்கு ஒன்றை கப் தண்ணீர் (1: 1 ½) என்ற விகிதத்தில் மூன்று கப் அரிசிக்கு 4 ½ கப் தண்ணீர் வரும்.
ஆனால் ஏற்கனவே கறி வேக 1 கப் தண்ணீர் சேர்த்திருப்பதால் அதையும் கணக்கிட்டு 3 ½ கப் தண்ணீர் சேர்த்து அதில் பாதம் விழுதையும் சேர்த்து உப்பு தேவைக்கு சேர்த்து மீதி இருக்கும் புதினா மல்லியையும் சேர்த்து அரிசியையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதித்ததும் வெயிட் போட்டு மூன்று விசில் வரும்வரை காத்திருந்து பிறகு சிறு தணலில் ஐந்து நிமிடம் வைத்து தீயை அணைக்கவும். பின்பு ஆவி அடங்கியதும் திறக்கவும். சுவையான ஈத் ஸ்பெஷல் பிரியாணி தயார்.