
சமைக்க தேவையானவை
- ஊற வைப்பதற்கு
- சிக்கன் – 300 கிராம்
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
- வறுத்து அரைப்பதற்கு
- மிளகு – 1 டீஸ்பூன்
- தேங்காய் – 1/4 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
- வரமிளகாய் – 4
- மல்லி – 1 டீஸ்பூன்
- இஞ்சி – 1 இன்ச்
- பூண்டு – 5 பல்
- பட்டை – 1 துண்டு
- ஏலக்காய் – 2
- கிராம்பு – 3
- கறிவேப்பிலை – சிறிது
- மசாலாவிற்கு
- எண்ணெய் – 5 டீஸ்பூன்
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
- மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிது
- பச்சை மிளகாய் – 3 (அரைத்துக் கொள்ளவும்)
- உப்பு – சுவைக்கேற்ப
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சிக்கனில் போட்டு பிரட்டி, குறைந்தது 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து, நல்ல மணம் வரும் வரை சில நிமிடங்கள் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பிறகு அந்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து மசாலாவைத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, சீரகம், சோம்பு சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
பின் தக்காளியை சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும். அடுத்து மல்லித் தூள் சேர்த்து குறைவான தீயில் 2 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 2-3 நிமிடம் நன்கு கிளறி, ஊற வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு மசாலா சிக்கனில் சேருமாறு கிளறி விட வேண்டும். இப்படி குறைந்தது 5 நிமிடம் குறைவான தீயில் சிக்கனை வதக்க வேண்டும்.
அடுத்து அதில் 1-2 கப் நீரை ஊற்றி, மிதமான தீயில் மூடி வைத்து, சுமார் 15 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும். பின் கறிவேப்பிலை மற்றும் அரைத்த பச்சை மிளகாயை சேர்த்து, 1-2 நிமிடம் வதக்கி இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான காரைக்குடி சிக்கன் வறுவல் தயார்.