சாமை சாம்பார் சாதம்

சமைக்க தேவையானவை
- சாமை அரிசி – ஒரு கப்
- துவரம் பருப்பு – அரை கப்
- சின்ன வெங்காயம் – ஒரு கப்
- கறிவேப்பிலை – 4 இணுக்கு
- தக்காளி – 2
- புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
- தண்ணீர் – 3 கப்
- உப்பு – தேவையான அளவு
- அரைக்க
- பூண்டு – 4 பல்
- இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
- சோம்பு – அரை தேக்கரண்டி
- தனியா – 2 மேசைக்கரண்டி
- சீரகம் – ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் – சிறு துண்டு
- வரமிளகாய் – 2
- கறிவேப்பிலை – 2 இணுக்கு
- தாளிக்க:
- சீரகம் – ஒரு தேக்கரண்டி
- கடுகு – ஒரு தேக்கரண்டி எண்ணெய் – தாளிக்க
செய்முறை
முதலில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைத் தோலுரித்துக் கொள்ளவும். நான் மஞ்சள் பொடிக்கு பதிலாக பொங்கல் பானையில் வைத்த பச்சை மஞ்சள் உபயோகித்துள்ளேன். இவற்றுடன் விருப்பமான காய்கறிகளையும் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். சாமை அரிசியை நன்றாகக் களைந்து கல் போக அரித்து எடுத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பையும் நன்கு கழுவி அரிசியுடன் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். அரிசி ஊறவைத்த தண்ணீரில் சிறிதளவு எடுத்து அதில் புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். தக்காளி குழைய வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் புளித்தண்ணீரை வடிகட்டி ஊற்றவும். பிறகு ஊறவைத்த சாமை அரிசியையும், துவரம் பருப்பையும் தண்ணீருடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதி வந்தவுடன் நன்றாகக் கலந்து குக்கரை மூடி வேகவைக்கவும். 4 விசில் வந்ததும் இறக்கிவிடவும். ஆவி வெளியேறியவுடன் நன்றாக கிளறிவிட்டு வேறு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். சுவையான சாமை சாம்பார் சாதம் தயார்.