
சமைக்க தேவையானவை
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- நெய் – 1 டீஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- முந்திரி – 10
- உப்பு – சுவைக்கேற்ப
- கொத்தமல்லி – சிறிது
- ஊற வைப்பதற்கு
- பேபி உருளைக்கிழங்கு – 25
- தயிர் – 1 கப்
- தந்தூரி மசாலா பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- கடலை மாவு – 1 டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
- எண்ணெய் – 1 டீஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை
முதலில் பேபி உருளைக்கிழங்குகளை குக்கரில் போட்டு, தேவையான அளவு நீர் ஊற்றி, உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும், குக்கரைத் திறந்து உருளைக்கிழங்கு மென்மையாக வெந்துள்ளதா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
பின் உருளைக்கிழங்குகளின் தோலுரித்து, உருளைக்கிழங்குகள் பெரிதாக இருந்தால், அதை துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பின்பு ஒரு பௌலில் தயிருடன், உப்பு மற்றும் மசாலா பொடிகளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
அதன் பின் வேக வைத்துள்ள உருளைக்கிழங்குகளைப் போட்டு நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்குகளைப் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
பின் அதே வாணலியில் உள்ள எண்ணெயில் சீரகத்தைப் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள். அடுத்து எஞ்சியிருக்கும் உருளைக்கிழங்கு ஊற வைத்த தயிர் கலவையை சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வையுங்கள். உங்களுக்கு வேண்டுமானால் அத்துடன் சிறிது உப்பு மற்றும் மிளகாய் தூளை சேர்த்துக் கொள்ளலாம்.
மறுபுறம் முந்திரியை சுடுநீரில் போட்டு பத்து நிமிடம் ஊற வைத்து அரைத்து, கிரேவியுடன் சேர்த்து 2 நிமிடம் நன்கு கொதிக்க வையுங்கள். இப்போது வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்குகளை சேர்த்து சில நிமிடங்கள் நன்கு கொதிக்க வையுங்கள்.
அடுத்து சில கறித்துண்டுகளை நெருப்பில் நன்கு சுட்டு, ஒரு சிறிய பௌலில் போட்டு, அந்த பௌலை கிரேவியின் நடுவே வைத்து, அந்த கறித்துண்டில் நெய் சேர்க்கும் போது புகைக்க ஆரம்பிக்கும். அப்போது உடனே வாணலியை மூடியால் 2 நிமிடம் மூடி வைக்க வேண்டும். பின் மூடியைத் திறந்து கிரேவியின் மேலே கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான தந்தூரி ஆலு கிரேவி தயார்.
குறிப்பு:இந்த கிரேவியை கறித்துண்டுகளைப் புகைக்காமலேயே சாப்பிடலாம். ஆனால் உங்களுக்கு ஹோட்டலில் கொடுப்பது போன்று சுவை இருக்காது. இந்த கிரேவிக்கு பேபி உருளைக்கிழங்குகளுக்கு பதிலாக சாதாரண உருளைக்கிழங்குகளையும் பயன்படுத்தலாம். அதற்கு அந்த உருளைக்கிழங்குகளை 3-4 விசில் விட்டு இறக்கி, துண்டுகளாக்கி பயன்படுத்த வேண்டும். உங்களிடம் தந்தூரி மசாலா பவுடர் இல்லாவிட்டால், கரம் மசாலாவுடன் சிறிது உலர்ந்த வெந்தயக் கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள்.