இனிப்பு பொங்கல்சைவம்பொங்கல்

திகட்டாத சர்க்கரைப் பொங்கல்

பொங்கல் என்றாலே சர்க்கரைப் பொங்கல்தான் நம் எல்லோர் நினைவுக்கு மட்டுமல்ல நாவுக்கும் ஞாபகம் வரும். ஏனெனில் தமிழர்களின் பாரம்பரியத் திருவிழாக்களில் ஒன்றான பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் முக்கியமே இந்த சர்க்கரைப் பொங்கல்தான். அப்படிப்பட்ட பொங்கல் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு காரணம் மங்களகரம் என்று என் பாட்டி அடிக்கடி சொல்வதுண்டு.

தாமிரபரணி ஆற்றுக்கு அருகில் அமைதியாய் வீற்றிருக்கும்  கிராமத்தில் பொங்கல் பண்டிகை அன்று, அதிகாலையில் எங்கள் வீட்டு வாசலில் அழகிய கோலங்கள், கரும்புகளுக்கு இடையில் நிலத்தில் விளைந்த பச்சரிசியைக் கொண்டு  அம்மாவும், பாட்டியும் இணைந்து குலவையிட்டு வைக்கும் பொங்கலை இன்னும் என்னால் மறக்கவே முடியாது.

அப்படிப்பட்ட பொங்கலை எப்படிச் செய்வது என்று இன்றைய தலைமுறைக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது எனது கடமையும் கூட. வாங்க… தித்திக்கும் சர்க்கரைப் பொங்கல் அதாவது என் பாட்டிச் சொல்வதுபோல மங்களகரமான பொங்கல் எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்


  • பச்சரிசி- 1/2 கிலோ
  • பாசிப்பருப்பு- 50 கிராம் (ஊற வைத்து கழுவியது), பால்- 3/4 லிட்டர்
  • முந்திரி- 10
  • உலர் திராட்சை- 10
  • வெல்லம்- 600 கிராம் (பொடி செய்து கொள்ளவும்)
  • நெய்- 150 கிராம்
  • பச்சை கற்பூரம்- 1 சிறிய கட்டி (பொடி செய்து கொள்ளவும்)
  • ஏலக்காய் பொடி- 1/2 டீஸ்பூன்.

செய்முறை:


முதலில் என் அம்மா அரிசியை கழுவி வைத்துவிடுவார்கள்.  கழுவிய நீரை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்வார்கள். பின்னர் ஒரு மண் பானை (அல்லது பொங்கல் வைப்பதற்கான பாத்திரத்தை) அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் அரிசி கழுவிய நீரை பாத்திரம் முழுவதும் நிரப்பிவிடுவார்கள்.


மண் அடுப்பில் தக தக என எரியும் விரகுகளுக்கு மேலே, வைக்கப்பட்டுள்ள பானையில், பாலானது நன்கு கொதித்து, பொங்கி வரும். அதிலிருந்து சிறிது நீரை எடுத்து விட்டு, பிறகு அரிசி மற்றும் பாசிப்பருப்பை போட்டு, நன்கு கிளறி விடுவார்கள். அதே சமயம் மற்றொரு மண் பானையை அடுப்பில் வைத்து, அதில் மணக்கும் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு, வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவார்கள்.


( மண் பானையிலிருந்து பால் பொங்கி வரும் பொழுது குலவையிடுவார்கள். அந்த குலவையில் விசயம் இருக்கு. எங்க வீட்டில்தான் முதலாவதாக பால் பொங்கிவிட்டது என்பதை கிராமத்திற்கேச் சொல்லும்படி உரக்க குலவை விடுவார்கள். யார் முதலில் குலவை விடுவது என்ற போட்டி  இப்பொழுதும் நடக்கும். நகரத்தில் குலவைக்கு பதிலாக குக்கர்களின் விசில் சத்தம் மட்டுமே ஒலித்ததை முதன் முதலாக கேட்டபோது என் அம்மாவின் ஞாபகம் எனக்கே அறியாமல் வந்துவிட்டது.


பிறகு அரிசியானது வெந்ததும், அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை மற்றும் சற்று தாராளமாக நெய் ஊற்றி பிரட்டி, பின் பொடி செய்து வைத்துள்ள வெல்லத்தை போட்டு, நன்கு கிளறிவிடுவார்கள். வெல்லம் கரைந்ததும், அதில் ஏலக்காய் பொடி மற்றும் பச்சை கற்பூரத்தை போட்டு ஒரு முறை அழகாக கிளறி எல்லாம் ஒரு சேர இறுகி வந்ததும் இறக்கி வைத்துவிடுவார்கள்.


அதன் பின் சூரிய பகவானுக்கு பூஜை செய்து விட்டு எனது அப்பா, எனக்கு மற்றும் என் தங்கைக்கு சாப்பிடக் கொடுப்பார்கள். நாங்கள் அதற்காகவே காத்துக்கிடப்போம். அது அம்மா செய்த திகட்டாத தித்திக்கும் பொங்கல் அல்லவா. இன்றைக்கும் அம்மாவின் கை பக்குவத்தில் நான் என் புகுந்த வீட்டில் செய்கின்றேன். நீங்களும் அப்படியே செய்யுங்கள். ருசியும், மங்களமும் வீட்டில் நிறைந்திருக்கும்.


குறிப்பு : பொங்கலை மண்பானையில் செய்தால், அதன் சுவைக்கு அளவே இருக்காது. குக்கர் பொங்கல் பெருகிவிட்ட காலத்தில் நமது பாரம்பரிய சுவையை அறிய பொங்கல் பண்டிகையிலாவது முடிந்தவரை மண்பானையில் செய்து பரிமாறுங்கள்.

 

 

 

Amma Samaiyal

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button
Call Now Button