இட்லிசமையல் குறிப்புகள்சைவம்

திருநெல்வேலி பொடி இட்லி

Nellai Podi Idli

திருநெல்வேலி என்பது எங்கள் ஊரு என்பதில் எனக்கு எப்பொழுதுமே பெருமை உண்டு. நான் ஏற்கனவே கூறியதுபோல், எங்கள் ஊர் தாமிரபரணி தண்ணீரைக் கொண்டு எதை சமைத்தாலும் அதன் ருசியே தனிதான். அப்படியிருக்க, நெல்லை பொடி இட்லி பற்றி இந்த பதிவில் கூறுகின்றேன். இது பலருக்கும் புதியதாக இருக்கலாம். ஆனால், இதை ஒரு முறை செய்து சுவைத்துப் பாருங்கள். அடிக்கடி இந்த இட்லியைதான் வீட்டில் கேட்பீர்கள். இந்த பொடியை காற்று புகாத ஒரு டப்பாவில் சேகரித்துக் கொண்டு, இட்லிக்கு பொடியாகவும் தொட்டுக் கொள்ளலாம். அதேபோல் மரச்செக்கில் ஆட்டிய நல்லெண்ணைய் விட்டு சாப்பிட்டால் இதன் சுவை உள் நாக்கு வரை உச்சுக் கொட்டும். சரி இனி நெல்லை பொடி இட்லியை எப்படி செய்வது என்பது குறித்து பார்ப்போம்.

செய்முறை


முதலில் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து தோலுடன் கூடிய உடைத்த உளுத்தம் பருப்பை ஒரு கப் அளவு சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பு இல்லை என்றால் தோல் நீக்கிய உளுத்தம்பருப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதன் பின்னர் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் சிறிதளவு பெருங்காயத்தை சேர்த்து நன்றாகப் பொறித்துக் கொள்ள வேண்டும். அதன்பின் 6 பல் பூண்டை இடித்து எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக சிவந்து வருமாறு பொறிக்க வேண்டும். பிறகு அதே கடாயில் காரத்திற்கு தகுந்தாற்போல் ஏழு அல்லது எட்டு வரமிளகாய் மற்றும் இட்லி பொடிக்கு தேவையான கல் உப்பையும் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

அதன்பின் கால் கப் எள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொண்டு எள் நன்றாக பொரிந்து வரும் வரை வறுக்க வேண்டும். பின்னர் இவை அனைத்தையும் நன்றாக ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் எப்பொழுதும் போல இட்லியை செய்து ஒவ்வொரு இட்லியையும் நான்கு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பின் மீது கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு சேர்த்து தாளித்து அதனுடன் வெட்டி வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்க்க வேண்டும்.

இவற்றை நன்றாக கிளறி விட்டு அதனுடன் பொடித்து வைத்துள்ள இட்லி பொடியை இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் சேர்த்து நன்றாக பிரட்ட வேண்டும். 5 நிமிடம் சிறிய தீயில் அப்படியே வைத்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். இறுதியாக ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு அடுப்பை அனைத்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான திருநெல்வேலி பொடி இட்லி தயாராகிவிட்டது.

இந்த இட்லி பொடியை ஒரு டப்பாவில் போட்டு வைத்து அதனை ஃப்ரிட்ஜில் வைத்தும் ஒரு மாதத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த இட்லி பொடியுடன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து இட்லி மற்றும் தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டோம் என்றால் அவ்வளவு அசத்தலான சுவையில் இருக்கும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்
Via
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button