
சமைக்க தேவையானவை
- உருளைக்கிழங்கு – 3
- பட்டை – சின்ன துண்டு 3
- நறுக்கிய வெங்காயம் – கால் கப்
- நறுக்கிய தக்காளி – அரை கப்
- தேங்காய் துருவல் – ஒரு கப்
- மிளகாய் வற்றல் – 6
- உப்பு – ஒரு தேக்கரண்டி
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- சோம்பு – ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை – 2 கொத்து
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். பிறகு தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். பின் பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும் பின்பு தேங்காய்த் துருவலை மிக்ஸியில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி அரைத்து பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவேண்டும்
பின் அதில் மீண்டும் அரை கப் தண்ணீர் ஊற்றி அரைத்து இரண்டாம் பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகாய் வற்றல், சோம்பு, பட்டை போட்டு வதக்கி எடுத்து ஆறவைத்து மிக்ஸியில் போட்டு 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
பிறகு அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு 30 நொடி வதக்கவும். அதன் பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து விட்டு வெங்காயத்துடன் போட்டு ஒரு நிமிடம் வதக்கவேண்டும்.
பின் ஒரு நிமிடம் கழித்து அரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கலக்கி விடவும். அதில் அரைத்து எடுத்து வைத்திருக்கும் விழுது மற்றும் மஞ்சள் தூள், சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விடவேண்டும்.
பிறகு ஒரு நிமிடம் கழித்து கொதித்து நுரைவரும் போது எடுத்து வைத்திருக்கும் பாலை ஊற்றி, 3 நிமிடம் கழித்து கிளறி இறக்கி விடவும். இறக்கிய பிறகு மேலே கொத்தமல்லி தழை தூவவேண்டும்.பின் இந்த தேங்காய் பால் குருமாவை இட்லி, தோசையுடன் பரிமாறவும்.