
சமைக்க தேவையானவை
- மட்டன் – கால் கிலோ
- பெரிய வெங்காயம் – ஒன்று
- தக்காளி – 2
- இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
- உப்பு – ஒரு தேக்கரண்டி
- கொத்தமல்லி – 2 கொத்து
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- பூண்டு – 3
- மிளகு – அரை தேக்கரண்டி
- பெருஞ்சீரகம் – அரை தேக்கரண்டி
- பட்டை – 2 துண்டு
- பச்சை மிளகாய் – 2
- சோம்பு தூள் – அரை தேக்கரண்டி
- சீரகத் தூள் – அரை தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
செய்முறை
முதலில் மட்டனை துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். கொத்தமல்லி தழையை ஆய்ந்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். குக்கரில் சுத்தம் செய்த மட்டன் எலும்பு, இஞ்சி பூண்டு விழுது, சீரகத்தூள், சோம்பு தூள் ஆகியவற்றை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வெய்ட் போட்டு 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
கறி வெந்ததும் திறந்து கிளறி விட்டு 4 நிமிடம் கழித்து அதில் மேலும் அரை கப் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கின வெங்காயத்தை போடவும். அதன் பிறகு அதில் நறுக்கின தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை போட்டு 8 நிமிடம் கொதிக்க விடவும்.
சூப் 8 நிமிடம் கொதித்த பிறகு அதனுடன் கொத்தமல்லி தழையை போட்டு கலக்கி விட்டு தீயை குறைத்து வைத்து 3 நிமிடம் நுரைத்து வரும் வரை கொதிக்க விடவும். பின்னர் பூண்டு, மிளகு, பெருஞ்சீரகம் மூன்றையும் சேர்த்து வைத்து அம்மியில் ஒன்றிரண்டாக தட்டி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை துண்டுகளை போட்டு தாளித்து தட்டி வைத்த பூண்டு, மிளகு, பெருஞ்சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
3 நிமிடம் கழித்து தாளித்தவற்றை சூப்பில் ஊற்றி கலக்கி விடவும். ஒரு நிமிடம் அப்படியே வைத்திருக்கவும். சூப் வாசனை வந்ததும் மேலே கொத்தமல்லி தழை தூவி 4 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விடவும். வாசனையுடன் கூடிய மட்டன் தக்காளி சூப் தயார்.