
சமைக்க தேவையானவை
- வஞ்சிரம் மீன் – 5
- வெங்காயம் – 2
- தக்காளி – 2
- பூண்டு – 10 பல்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- கொத்தமல்லி தழை – சிறிதளவு
- மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- தேங்காய் பால் – சிறிதளவு
- வாழை இலை – 1
- எலுமிச்சை சாறு – சிறிதளவு
செய்முறை
மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். மீனை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பிரட்டி ½ மணி நேரம் ஊற வைக்கவும்.
மீன் நன்கு மசாலாவுடன் ஊறியவுடன் தோசைகல்லில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பூண்டு, மஞ்சள் தூள், கொத்தமல்லி, மிளகாய் தூள், உப்பு, சேர்த்து வதக்கவும்.
பின் வதங்கிய மசாலாவுடன் சிறிதளவு கெட்டியான தேங்காய் பால் சேர்த்து கிளறவும். மசாலா திக்கான பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். வதங்கிய தேங்காய்பால் மசாலாவை சிறிதளவு எடுத்து ஒரு வாழை இலையில் வைக்கவும். பின்னர் அதன் மேல் வறுத்து வைத்துள்ள மீன் துண்டை வைத்து அதன் மேல் மீண்டும் சிறிதளவு மசாலாவை வைத்து வாழை இலையை நன்றாக மடித்து வாழை நாரினை கொண்டு கட்டவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதில் செய்து வைத்த வாழை இலை மீனை வைத்து சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுத்து பரிமாறவும். சுவையான வாழை இலை மீன் வறுவல் ரெடி.